Skip to main content

ஞானியார் அடிகள்

ஞானியார் அடிகள்

  

இந்தி திணிப்பை எதித்தவர்கள் இன்று பேசப்படுகிறார்கள். இப்போராட்டத்திற்கு மூலவிதையாக இருந்தவர்கள் கால ஓட்டத்தினால் கண்டுபிடிக்க வேண்டியுள்ளது. அப்படியான ஒருவர் தான் ஞானியர் அடிகள். பெரியாரின் குடியரசு இதழ் அலுவலகத்தை திறந்து வைத்தவர் இவர். சமற்கிருத்தையும் இந்தி மொழியையும் ஒருசேர எதித்தவர்.

 

ஞானியார் அடிகள் (மே 17, 1873- பிப்ரவரி 1, 1942) சைவ மறுமலர்ச்சிக்கு உழைத்த துறவி, பேச்சாளர், உரையாசிரியர். மதுரைத் தமிழ்ச்சங்கம் தோன்றுவதற்கு முதன்மைக் காரணமாக இருந்தவர். தமிழிலும், வடமொழியிலும் பெரும் தேர்ச்சிக் கொண்டவர். தமிழையும் சைவத்தையும் ஒன்றாக எண்ணிய இவர் சைவசித்தாந்த பெருமன்றம், வாணிவிலாச சபை போன்ற அமைப்புகளை உருவாக்கினார். இவர் திருக்கோவிலூர் மடத்தின் தலைவராகவும் இருந்தார்.

தஞ்சை மாவட்டத்தில் கும்பகோணம்அருகே திருநாகேச்சரம் என்ற ஊரில் வீரசைவ மதத்தை பின்பற்றும் செங்குந்தர் கைக்கோள முதலியார் மரபில் தோன்றிய ஞானியார் அடிகளின் இயற்பெயர் பழனி. இவரின் பெற்றோர் அண்ணாமலை - பார்வதி அம்மையார். இவர் நவம்பர் 20, 1889 அன்று திருக்கோவலூர் திருப்பாதிரிப்புலியூர்மடத்தில் துறவு மேற்கொண்டார்.

செங்குந்தர் ஜாதியில் பிறந்து பின்னர் துறவறம் மேற்கொண்ட ஞானியார் அடிகள் பல மொழிகளைக் கற்றுத் தேர்ந்தார். அவர் தெலுங்கு மொழியை சென்னை கேசவுலு நாயுடுவிடம் இருந்தும் சம்ஸ்கிருத மொழியை ராமநாத சாஸ்திரிகள் இடமிருந்தும் தமிழ் மொழியை சி.மு.சாமிநாத அய்யர் என்னும் பெரும் புலவரிடமிருந்தும் கற்றார்.

சாமிநாத அய்யர் தினமும் பாடம் சொல்லி முடித்தவுடம் ஒரு பாடலை எழுதி வீட்டுப் பாடமாகக் (ஹோம் ஒர்க்) கொடுப்பார். அந்தச் செய்யுளில் என்ன “சீர், தளை” இருக்கிறது என்பதை ஞானியார் அடிகள் எழுதி வைப்பார். மறுதினம் வரும் போது அதைச் சரிபார்த்துவிட்டு, ஐயர் மேலும் ஒரு பாடல் எழுதுவார்.

ஒருமுறை அவருக்கு பொருள் தட்டுப்பாடு போலும்.அது மனதை வாட்டியதாலோ என்னவோ கீழ்கண்டவாறு ஒரு கவிதையை ‘ஹோம் ஒர்க் நோட்புக்’கில் எழுதிக் கொடுத்துவிட்டுப் போய்விட்டார்.

“நற்பாடலிபுரத்து நாதனே! நாயினேன்

பொற்பாம் நினதடியைப் போற்றினேன் தற்போது

வேண்டுஞ் செலவிற்கு வெண்பொற்காசுப் பத்து

ஈண்டு தருக இசைந்து”—

என்னும் வெண்பாவினை எழுதி வைத்துவிட்டுச் சென்றார். இந்தச் செய்யுளுக்கு இலக்கணக் குறிப்பு எழுத வேண்டியது அடிகளார் வேலை. மறுநாள், ஐயர் வழக்கம்போல பாடம் கற்பிக்க வந்தார். அன்றைய பாடம் முடிந்த பின் மேலும் ஒரு செய்யுளை எழுதுவதற்காக குறிப்புப் புத்தகத்தைத் திறந்தார். அதில் பத்துரூபாய் பணமும் இருந்தது கண்டு வியந்தார்.“இது என்ன? நான்பாட்டுக்கு (அதாவது என் மனம் போனவாறு) ஏதோ கவிதை எழுதி வைத்தேன். பொருள்மட்டும்தானே எழுதச்சொன்னேன்” என்றார். உடனே அடிகாளாரும் “நான் பாட்டுக்குப் பொருள் தந்தேன்; வேறு எதுவும் இல்லை” என்றார்.

தமிழ் நயம் உணர்ந்தோர் இதில் வரும் “பாட்டுக்கு”, “பொருள்” என்ற சொற்கள் சிலேடையாகப் பயன்படுத்தப்பட்டிருப்பதைக் அண்டு இன்புறுவர். சைவமும், தமிழும் தழைத்தோங்க உருவாக்கப்பட்ட மடங்கள்தான் சைவத்திருமடங்கள். திருவாவடுதுறை, தருமபுரம் மடங்களை அறிந்து பேசும் பலரும் சைவத்திருமடமாகிய திருப்பாதிரிப்புலியூர் ( கடலூரில் உள்ள திருக்கோவலூர் ஆதின மடம்) மடத்தை அறிந்து பேச மாட்டார்கள்.

1910இல் வெளிவந்த “அபிதான சிந்தாமணி” நூலில் பதினெட்டு திருமடங்களில் ஒன்றாக திருப்பாதிரிப்புலியூர் மடத்தைப் பற்றிக் குறிப்பிட வில்லை. இந்நூல் வெளிவருவதற்கு 20 ஆண்டுகளுக்கு முன்பே, திருப்பாதிரிப்புலியூர் மடம் தன்னை விளம்பரப்படுத்திக் கொள்ளாமலே சைவத்திற்கும், தமிழுக்கும் மிகப்பெரும் தொண்டாற்றி வந்துள்ளது.

1889ஆம் ஆண்டில் திருப்பாதிரிப்புலியூர் மடத்தின் 5வது தலைவராக 17வயது நிரம்பிய ஒருவர் மடாலயத் தலைவராக பொறுப்பு ஏற்றார். மற்ற மடத்துத் தலைவர்களெல்லாம் மடத்துக்குள் இருந்தபடி சிவனே என்று இறைப்பணி செய்து வந்த போது, இவர் ஒருவர் மட்டும் சூறாவளியாக உருவெடுத்து தமிழ்நாடெங்கும் சுற்றுப்பயணம் செய்தார். இறைப்பணி செய்ய போகிற இடங்களில் எல்லாம் தமிழர்கள் தங்கள் தாய்மொழியாம் தமிழ்மொழியை தாழ்வாக கருதி வந்ததைக் கண்டு மனம் குமுறினார்.

இந்நிலையில் தான், 1900ஆம் ஆண்டில் திருப்பாதிரிப்புலியூர் மடாலயத் தலைவரைத் தரிசிக்க பாலவநத்தம் ‘வள்ளல்’ பாண்டித்துரைத் தேவர் வருகை தந்தார். தமிழுக்கு ஏற்பட்ட அவலநிலை குறித்து விளக்கிய ஆதினகர்த்தர் தமிழின் வளர்ச்சிக்கு, சங்கம் வைத்து தமிழைப் போற்றிய மண்ணாம் மதுரையிலே, “தமிழ்ச்சங்கத்தை மீண்டும் தோற்றுவித்து புத்துயிர் தாருங்கள்!” என்று வேண்டுகோள் விடுத்தார்.

1901இல் மதுரைத் தமிழ்ச்சங்கம் நிறுவிய செய்தி ஆதினகர்த்தருக்கு கிடைத்தது. உடனடியாக பாண்டித்துரை தேவருக்கும், பாசுகர சேதுபதிக்கும் “பாராட்டுத்திருமடல்” அனுப்பி வைத்து மகிழ்ந்து கொண்டாடினார். அவர் வேறு யாருமல்ல; திருப்பாதிரிப் புலியூர் “ஞானியாரடிகள்” என்று அழைக்கப்படும் சிவசண்முக மெய்ஞ்ஞான சிவாச்சாரியர் அடிகள் ஆவார். திருக்குடமூக்கு (கும்பகோணம்) அருகே உள்ள பாடல் பெற்ற திருத்தலமாகிய திருநாகேச்சுரம் எனும் ஊரில் 17.5.1873இல் அண்ணாமலையார்- பார்வதியம்மை இணையருக்கு மகனாகப் பிறந்தார் ஞானியாரடிகள். பெற்றோர் அவருக்கு பழனியாண்டி என்று பெயரிட்டு அழைத்தனர்.

பள்ளியில் சேர்ந்து தமிழ்,ஆங்கிலம், வடமொழிகளை எழுதவும் படிக்கவும் தெரிந்து கொண்ட பழனியாண்டி தமிழ்மொழி மீது தீவிரப் பற்று கொண்ட பிறகு சிதம்பரம் மு.சுவாமிநாதர் அவர்களிடம் இலக்கணம் இலக்கியத்தில் தேர்ச்சி அடைந்தார்.

நான்காம் குருமூர்த்தி மறைவுக்குப் பிறகு திருமடத்தின் பொறுப்பினை ஏற்ற ஞானியாரடிகள் தமிழ்நாட்டில் நிகழ்ந்த இலக்கிய, சமய விழாக்களில் பெருமளவில் தலைமை வகித்ததோடு மணிக்கணக்கில் சொற்பொழிவு ஆற்றுவதிலும் சிறந்து விளங்கினார்.

சைவநெறியும் தமிழும் நிலைக்கும் வண்ணம் 1903இல் தமிழுக்கு பாடாற்றிய பாண்டித்துரையார் அவர்கள் தலைமையில் “வாணி விலாச சபை” எனும் ஓர் அமைப்பை திருமடத்தில் தொடங்கினார். அங்கு வாரந்தோறும் சொற்பொழிவுக் கூட்டங்கள் நடத்தப்பட்டது.

ஞானியாரடிகளிடம் கல்வி பயின்ற ம.ரா.குமாரசாமிப்பிள்ளை என்பவர் மாணவர்கள் கல்வித்திறனை ஊக்குவிக்கும் பொருட்டு “ஞானியார் மாணவர் கழகம்” அமைப்பை நிறுவினார். அங்கு கந்த புராணம், பெரிய புராணம், மெய்கண்ட சாத்திர நூல்கள், இராமாயணம், பாரதம், சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகிய நூல்களில் இருந்து ஞானியார் அடிகளே வந்து பாடம் நடத்துவார்.

வாணிவிலாச சபை, ஞானியார் மாணவர் கழகம் ஆகிய அமைப்புகளின் சார்பில் நடத்தப்படும் கூட்டங்களில் பாண்டித்துரைத் தேவர், உ.வே.சாமிநாத ஐயர், ஜஸ்டிஸ் டி.சதாசிவ ஐயர், பா.வே. மாணிக்க நாயக்கர், சோ.வடிவேலு செட்டியார், பொ.முத்தையா பிள்ளை, ரா.பி.சேதுப்பிள்ளை , சிவகுருநாதம் பிள்ளை ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்று ஞானியாரடிகளின் தமிழ்த் தொண்டினை வியந்து பாராட்டுவர்.

அக்காலத்தில் வட இந்தியாவில் ஆரிய சமாசம், பிரம்ம சமாசமும் வேதாந்தக் கொள்கையை பரப்பி வந்தன. அதற்கு மாற்றாக தமிழ்நாட்டில் சைவ சித்தாந்தக் கொள்கையைப் பரப்புவதற்கு “தமிழ்க்கடல்” மறைமலையடிகள் முயன்ற போது ஞானியாரடிகள் முழு ஒத்துழைப்பு நல்கினார். ஞானியாரடிகள் மீது பேரன்பும் பெருமதிப்பும் கொண்டிருந்தவர் என்பதற்கு மறைமலையடிகள் எழுதிய நாட்குறிப்பு சான்றாக உள்ளது.

“திருப்பாதிரிப்புலியூர் மடம் அடைந்தேன். ஞானியாரைப் பார்த்தேன். அவர் என்பால் மிகவும் அன்பு கூர்ந்தார். அவர் நிறைந்த கல்வியாளர்; குற்றமில்லா ஒழுக்கத்தினர்; நிறைந்த அன்பினர்”. (18.5.1905) 7.7.1907ஆம் ஆண்டு திருப்பாதிரிப்புலியூர் மடத்தில் “திருச்சிற்றம்பலம் விளக்கம்” எனும் தலைப்பில் மறைமலையடிகள் உரை நிகழ்த்தினார். அதில் சைவ சித்தாந்த மகாசமாசம் அமைக்க உதவுமாறு கேட்டுக் கொண்டார். அப்போது ஞானியாரடிகள் முன்னிலையில் “சைவ சித்தாந்த மகாசமாசம்” நிறுவப்பட்டது.

சைவ சித்தாந்த மகாசமாசம் உருவாக்கப்பட்ட பிறகு சென்னை, காஞ்சிபுரம், புதுவை ஆகிய ஊர்களில் கூட்டங்களும், மாநாடுகளும் பல்கிப் பெருகின. இதில் ஞானியாரடிகள், மறைமலையடிகள், பா.வே.மாணிக்க நாயக்கர், திரு.வி.க. ஆகியோர் கலந்து கொண்டு உரை நிகழ்த்துவர். அதுவும் ஞானியாரடிகள் சொற்பொழிவைக் கேட்பதற்கு என்றே வெகுதொலைவில் இருந்து மக்கள் கூட்டங் கூட்டமாய் திரள்வர்.

இதுதவிர, ஞானியாரடிகள் வழிகாட்டுதலில் பக்த பால சமாசம் (மணப்பூண்டி), கம்பர் கானமிர்த சங்கம் (திருவெண்ணெய் நல்லூர்), வாகீச பக்த சனசபை (நெல்லிக்குப்பம்), கலைமகள் கழகம் (புதுச்சேரி), புதுவை செந்தமிழ்ப் பிரகாச சபை, ஞானியார் சங்கம் (காஞ்சிபுரம்), சன்மார்க்க சபை (கடலூர்), சைவ சித்தாந்த சபை (உத்திர மேரூர்), சக்தி விலாச சபை (திருவண்ணாமலை) ஆகியவை உருவாக்கப்பட்ட அமைப்புகளாகும்.

த.வே.உமா மகேசுவரனார் தொடங்கிய கரந்தைச் தமிழ்ச்சங்கத்தின் ஏழாம், எட்டாம் ஆண்டு விழாக்களில் ஞானியாரடிகள் தலைமை தாங்கியதோடு புலவர் கல்லூரி ஒன்றை தொடங்க வேண்டுமென்றும் வேண்டுகோள் விடுத்தார். அவரின் வேண்டுகோள் 1938இல் நிறைவேற்றப்பட்டது. த.வே.உமா மகேசுவரனார் அவர்கள் ஞானியாரடிகள் திருக்கைகளால் புலவர் கல்லூரியை திறக்கச் செய்தார். திருவையாறு சமசுகிருதக் கல்லூரியில் தமிழ் கற்பிக்க உமாமகேசுவரனார் எடுத்த முயற்சிக்கு ஞானியாரடிகள் பின்புலமாக இருந்ததும் இங்கு குறிப்பிடத்தக்கது.

ஞானியாரடிகள் சைவ சமயத்தைப் பின்பற்றினாலும் பிற சமயத்தவர் மீது எப்போதும் வெறுப்புணர்ச்சி கொண்டதுமில்லை. சமயப்பூசலில் ஒருபோதும் ஈடுபட்டதுமில்லை. சமயப்பொறையை தம்வாழ்நாள் முழுவதும் கடைப்பிடித்து வந்தார்.

மனிதர்கள் சமயத்தின் பேரால் உயர்வு தாழ்வு கற்பிக்காமல் சமத்துவ நெறியோடு விளங்க வேண்டும் என்பதே ஞானியாரடிகளின் பெருவிருப்பமாக இருந்து வந்துள்ளதை 1925இல் “குடியரசு” ஏட்டின் அலுவலகத் திறப்பு விழாப் பேச்சு நமக்கு உணர்த்துகிறது. பின் வருமாறு; ''நமது நாட்டில் உயர்வு தாழ்வு என்ற ஆணவம் மிகுந்து இருக்கிறது. சமத்துவம் என்ற உணர்ச்சி எங்கும் பரவ வேண்டும். குடி அரசுவின் கருத்தும் அதுவே என நான் அறிந்து கொண்டேன். சமயத்தில் இருக்கும் கேட்டை முதலில் அழிக்க வேண்டும். இவை குடியரசின் முதல் கொள்கையாக விளங்க வேண்டும். இப்பத்திரிகையில் ஶ்ரீமான் நாயக்கருக்கு எவ்வளவு சிரத்தை உண்டோ அவ்வளவு எனக்கும் உண்டு.” எங்கும் தமிழ், எதிலும் தமிழ் எனும் கொள்கையுடயவராய் விளங்கிய ஞானியாரடிகள் திருப்பாதிரிப்புலியூர் எனும் பெயரைச் சிதைத்து திருப்பாப்புலியூர் என்றும், திருப்பாபூர் என்றும் அழைப்பதை ஏற்கமுடியாது என்றார்.

1938இல் பள்ளிகளில் இந்தி கட்டாயமாக்கப்பட்டது. அப்போது பாவலர் எம்.என். முத்துக்குமார சுவாமி என்பவர் இந்தியால் தமிழுக்கு இன்னல் உண்டா? இல்லையா? என்பதைத் தெரிவிக்குமாறு ஞானியாரடிகளுக்கு கடிதம் எழுதினார். நிகழ்வு ஒன்றில் அதற்குப் பின்வருமாறு வருத்தத்தோடு விடையிறுத்துப் பேசினார.:

“நமது தமிழர்களிடையே சிறந்த குணமொன்றுண்டு. அதாவது உடனிருப்பவர்களை மறந்துவிட்டு விருந்தினராக வருபவர்களை வரவேற்கும் மனப்பான்மையே! ஆயிரம் ஆண்டுகட்கு முன்பு சமஸ்கிருதம் தமிழ்நாட்டில் புகுந்தது. இதை நன்கு வரவேற்றோம். அதன்பால் நம்பிக்கை வைத்தோம். சில நூற்றாண்டுகட்கு முன்னர் ஆங்கிலம் வந்தது. இருங்கள், இருங்கள் என்றோம். நன்கு உபசரித்தோம். நாம் பிரதிபலன் என்ன கண்டோம்? அவ்விரு பாஷைகளும் தமிழை நாளடைவில் ஜீரணம் செய்து வருகின்றன. இப்போது இந்தி பாஷையும் வருகின்றதாம். அதுவும் கட்டாயமாக வரப்போகின்றதாம். வரட்டும், இருக்கட்டும், இந்தியால் தமிழ் அழியட்டும், ஒழியட்டும்! தமிழன்பர்கள் அதற்குடந்தையாக இருக்கட்டும் என்பதை வருத்தத்துடன் கூறுகிறேன். உள்ள பாஷையை சரிவரக் கவனியாது மற்ற பாஷைகளை ஆதரிப்பதன் பலனை நன்கு கண்டு விட்டோம். பிற பாஷைகள் உயர்வுடைய தெனினும் எங்கள் முருகனருளிய முத்தமிழுக் கீடாகாது என்று மட்டும் இது சமயம் கூறி நிறுத்திக் கொள்கிறேன். மேலும், இந்தி எதிர்ப்புக் கண்டன அறிக்கையையும் வெளியிட்டு தமது எதிர்ப்பைத் தெரிவித்தார். அவருடைய அறிக்கை பல இடங்களில் , பல சுவர்களில் அவரின் மாணாக்கரான சுந்தர சண்முகனார் என்பவரால் ஒட்டப்பட்டது.

ஞானியாரடிகள் நூல் வெளியீட்டுப் பணியிலும் ஈடுபட்டார். திருப்பாதிரிப்புலியூர் புராணம், திருப்பாதிரிப்புலியூர் தோத்திரக் கொத்து, அற்புதத் திருவந்தாதி, ஞானதேசிக மாலை, அவிநாசி நாதர் தோத்திரக் கொத்து, கந்தர்சட்டி சொற்பொழிவு ஆகிய நூல்களை வெளிக் கொணர்ந்தார். ஞானியரடிகள் 1939ஆம் ஆண்டில் திருமடத்தின் பட்டம் ஏற்று 50 ஆம் ஆண்டு நிறைவானதை முன்னிட்டு அவரின் பொன்விழா சிறப்பாக இரண்டு நாட்கள் நடத்தப்பட்டது. அந்த நிகழ்ச்சியில் ரசிகமணி டி.கே.சிதம்பரநாத முதலியார், தெ.பொ.மீனாட்சி சுந்தரனார், மு.கதிரேசன் செட்டியார், ந.மு.வேங்கடசாமி நாட்டார், ச.சச்சிதானந்தம் பிள்ளை ஆகியோர் ஞானியாரடிகள்களின் தமிழ்த் தொண்டைப் பாராட்டி சொற்பொழிவாற்றினர். ஞானியாரடிகள் பொன்விழா குறித்து “தமிழ்த்தென்றல்” திரு.வி.க.வும் கட்டுரை தீட்டி பாராட்டு வழங்கினார். அதுவருமாறு

 ''கோவலடிகளின் பேச்சுத் திறத்தை என்னவென்று சொல்வேன்!அதைச் சிறப்பிக்க எனக்குச் சொற்கள் கிடைக்க வில்லை, என் செய்வேன்!. பத்தொன்பதாம் நூற்றாண்டில் நாவன்மையிற் சிறந்தவர் இருவர் என்று சொல்லப்பட்டனர். அவர் கிளாட்ஸ்டனும் சுரேந்திர நாதருமாவர். அவ்விருவர்தம் நாவன்மை ஞானியார் நாவன்மையைக் கண்டதில்லை; கண்டிருப்பின்- கேட்டிருப்பின் வணக்கஞ் செய்திருக்கும். கடும் வெயில், மழை என்றும் பாராது ஆயிரக்கணக்கான சொற்பொழிவுகள் நிகழ்த்தியும் சலிப்புறாத ஞானியாரடிகள் திருச்சிராப்பள்ளி சைவச் சித்தாந்த மகா சமாச ஆண்டு விழாவை முடித்துக்கொண்டு நேராக பழனிக்கு சொற்பொழிவு நிகழ்த்தச் சென்றார். அங்கு கடுமையான உடல் நலக் குறைவு ஏற்பட்டு 1.2.1942இல் காலமானார்.

நூல் தரவுகள்:

1. தமிழ் வளர்த்த ஞானியாரடிகள்- தொகுப்பாசிரியர் வல்லிக்கண்ணன்.

2. தமிழ் வளர்த்த நல்லறிஞர்கள்- குன்றக்குடி பெரிய பெருமாள்.

3. செந்தமிழ்ச் செல்வி (1938)
சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழக வெளியீடு.


Comments

Popular posts from this blog

செங்குந்தர் கைக்கோள முதலியார் சமூக குலதெய்வம் கூட்டம் பட்டியல்

கோத்திரம் என்றாலும் கூட்டம் என்றாலும் வகையறா என்றாலும் குலம் என்றாலும் கிளை வம்சம் என்றாலும் இவை அனைத்தும் ஒன்றுதான் அந்தந்த ஊர் மொழி வழக்கத்துக்கேற்ப சொள்வார்கல். 1. திருப்பூர், கோயம்புத்தூர், ஈரோடு மற்றும் வட மாவட்டங்களில் உள்ள செங்குந்தர் முதலியார்கள்  கூட்டம் என்று கூறுவார்கள். 2.நாமக்கல் மாவட்டத்தில் உள்ள செங்குந்தர் முதலியார்கள்  கோத்திரம் என்று கூறுவார்கள். 3. தெற்கு மாவட்டங்களில் உள்ள செங்குந்தர் முதலியார்கள்  கிளை வம்சம் என்று கூறுவார்கள். 4. மற்ற சில இடங்களில் உள்ள செங்குந்தர் முதலியார்கள்  வகையறா என்று கூறுவார்கள். கூட்டம் அல்லது கோத்திரம் அல்லது வகையறா அல்லது குலம் என்பது ஆண் வழி வம்சாவழியும் உறவுமுறையாலும், வம்சாவழியாலும் இணைக்கப்பட்டுள்ள ஒரு மக்கட் குழுவாகும். ஒரு கூட்டத்தார் அதே கூட்டத்தைச் சார்ந்த குடும்பத்தில் பெண் எடுக்க மாட்டார்கள். இதன் காரணம் ஒரே குடும்பத்தைச் சார்ந்தவர்கள் பங்காளிகள், சக உறவுடையவர் என்பதால், அவர்களுக்கிடையில் திருமண உறவுகள் கிடையாது. அதாவது உலகத்தில் உள்ள அனைத்து நல்லான் கூட்டத்தை சேர்ந்தவர்கள் அண்ணன் தம்பி உறவு முறை உள்ளவர்கள்....

ராவ் பகதூர் மா. ஜம்புலிங்கம் முதலியார்

செங்குந்தர் கைக்கோள முதலியார்          ⚜️குலத் தோன்றல்⚜️ Rao bahadur  மா. ஜம்புலிங்கம் முதலியார்          (22.06.1890 - 28.10.1970) ⚜️  இன்று தென்னிந்தியாவுக்கு மின்சாரம் கிடைக்குது என்றால் அதற்க்கு இவர் தான் காரணம். அனல் மின் நிலையத்திற்க்கு தேவைப்படும் பழுப்பு நிலக்கரி(lignite coal) எல்லாம் நெய்வேலி பழுப்பு நிலக்கரி சுரங்கங்கத்தில் இருந்து தான் எடுக்கப்படுகிறது. ⚜️ நெய்வேலியில் நிலக்கரி இருப்பதை கண்டுபிடித்து,  நெய்வேலி நிலக்கரி சுரங்கங்கம் உருவாக காரணமாக இருந்து,  நிறுவனம் உருவாக்க 620 ஏக்கர் நிலம் தானமாக கொடுத்தவர்தான் இந்த   ஜம்புலிங்கம் முதலியார். பிறப்பு:  மா. ஜம்புலிங்கம் முதலியார்  கடலூர் மாவட்டம்,  பண்ருட்டி அருகில் திருக்கண்டலேஸ்வரம் ( திருவதிகை) என்ற கிராமத்தில் வசதிவாய்ந்த  திருவதிகை சிற்றரசர் வம்சாவழியில் வந்த     "செங்குந்தர் கைக்கோள முதலியார்" குடும்பத்தில் பிறந்தார். இவர் குடும்பம் பெரும் அளவில் ஜவுளி மற்றும் விவசாயம் செய்து வந்தது தகப்பனார் மிராசு...

தா. மோ. அன்பரசன் முதலியார் (தமிழக அமைச்சர்)

  தா. மோ. அன்பரசன் என்பவர் தமிழகத்தின் முன்னாள் தொழிலாளர் நலத்துறை அமைச்சராவார். இவர் குன்றத்தூரில் திசம்பர் 11, 1959 இல் பிறந்தவர். இவர் பி. யூ. சி வரை படித்துள்ளார். இவர் தமிழ்நாடு சட்டமன்றத்துக்கு உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கபட்டவராவார். அரசியல் வாழ்க்கை தொகு இவர் 2006 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலின் திமுக சார்பில் போட்டியிட்டு, அ.தி.மு.க வைச் சேர்ந்த பா. வளர்மதி என்பவரை ஆலந்தூர் தொகுதியில் தோற்கடித்து, தமிழ்நாடு சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் 2016 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் இதே தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு, தமிழ்நாடு சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் தி.மு.கவில் காஞ்சிபுரம் வடக்கு மாவட்டச் செயலாளராக இருக்கிறார். இவர் செங்குந்தர் கைக்கோள முதலியார் சமூகத்தை சேர்ந்தவர்.