செங்குந்தர் கைக்கோள முதலியார்
⚜️குலத்தோன்றல்⚜️
பிறப்பு
நன்மனச் செம்மல் சி.நடராஜ நன்தனகாரி அவர்கள் காஞ்சி மாநகரில் செங்குந்த குல பிரமுகராக விளங்கிய சின்ன குழந்தை முதலியார் - கல்யாணி அம்மாள் தம்பதியருக்கு 03.11.1907 அன்று மூன்றாவது மகனாக பிறந்தார். காஞ்சிபுரத்தில் நம் குல முதல் பட்டதாரியாக 1928ல் பி.ஏ. பட்டம் பெற்றார். பேரறிஞர் அண்ணாவும் உடன் படித்தவர். 1932ல் நம் குல முதல் வழக்கறிஞராக பதிவு செய்தார். சென்னை திருவல்லிக்கேணி செங்குந்தர் சங்க செயற்குழு உறுப்பினராக 1930ல் பணிவிடை செய்தார்.
வாழ்க்கை
1937ல் காஞ்சிபுரத்தில் நடந்த செங்குந்த மகாஜன மாநாட்டில் இளைஞர் அணி தலைவராக இருந்து சிறப்பாக செயல்பட்டார். இவருக்கு சி. ந.விஸ்வநாதன் எம்.ஏ.பி.எல்... டாக்டர். சி. ந. சொக்கநாதன், எம்.பி.பி.எஸ். சி.ந. சிவகுமார் பி.ஏ. பி.எல். டாக்டர் சி. ந. ரவீந்திரன் ஆகிய நான்கு மகன்கள் உள்ளனர்.
நமது தலைமை சங்கத்தில் சி. நடராஜ முதலியாரை அன்புடன் 'சி. என்.' என்று அழைப்பார்கள். அவரது மனைவி கௌரி அம்மாள் தலைமை யில் 09-09-1947ல் மாயவரத்தில் தென்னிந்திய செங்குந்தர் இரண் டாவது மாதர் மாநாடு நடந்தேறியது. 'சி. என்.' அவர்கள் 05.06.1944 அன்று தஞ்சை கூரை மாநாட்டின் செயலாளராக சிறப்புடன் பணி யாற்றினார். 17.3.1945-ஆம் ஆண்டு ஈரோட்டில் பேராசிரியர் எஸ். மீனாட்சி சுந்தரனார் தலைமையில் நடந்த ஜில்லா மாநாட்டில் 'நன்மனச் செம்மல்' பட்டம் சி. நடராஜ முதலியாருக்கு வழங்கப்பட்டது. சுமார் 30 ஆண்டு காலம் தலைமை சங்க செயலாளராகவும், செங்குந்த மித்ரன் கௌரவ ஆசிரியராகவும் சிறப்புடன் சேவை ஆற்றினார். மதராஸ் பாளையகாட் கம்பெனி உதவியுடன் சென்னை அரண்மனைக்காரன் தெருவில் அமைந்துள்ள செங்குந்தர் மாளிகை தோற்றுவிக்க அரும்பாடுபட்டார்.
1940ல் செங்குந்த கைக்கோளர் சமுதாயத்தை பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் அரசாங்கம் நீக்க முயன்ற போது மீண்டும் தென்னிந்திய செங்குந்த மகாஜன சங்கம் தோற்றுவித்த அண்ணல் சபாபதி முதலியாருடன் இணைந்து போராடினார். தன் இறுதிக் காலம் வரை, குலத்தலைவர், கைத்தறிக் காவலர் பத்மஸ்ரீ எம். பி. நாச்சிமுத்துவின் உயிருக்கு உயிர் நண்பனாக வாழ்ந்து காட்டியவர். ஆன்மீக பணியில் சி.என். அவர்கள் தலைவராக செயல்பட்டு ஸ்ரீ பாலசுப்பிரமணிய பக்த ஜனசபை முத்து விழா, திரு. வி. க. நூற்றாண்டு விழா 05.08.1983 ஆம் ஆண்டு சிறப்புடன் நடத்திக் காட்டியவர்.
1940ல் அவரது தலைமையில் ஸ்ரீ சிவசுப்பிரமணிய பக்த ஜனசபை வெள்ளி விழா திரு - வி. க. முன்னிலையில் நடத்தப்பட்டது. அவரது சமுதாய பணியில் திருவல்லிக்கேணி ஸ்ரீ நடராஜ கல்வி கழகம், புளுமவுண்டன் சிட்பண்டு, சைதை நில வளவங்கி, சைதை அன்ன பூரணி பள்ளி, மதராஸ் கைத்தறி கூட்டுறவு சங்க வழக்கறிஞர் ஆகியவற்றிற்கும் மேலாக தென்னிந்திய செங்குந்த மகாஜன சங்க சேவை அவரது உயிர்நாடியாக விளங்கியது. நன்மனச் செம்மல் சி. நடராஜ முதலியார் நூற்றாண்டு விழா 21.11.2008 அன்று சென்னை மைலாப்பூர் பாரதிய வித்யா பவனில் தென்னிந்திய செங்குந்த மகாஜன சங்கத் தலைவர் உத்யோக ரத்னா ஜெ.சுத்தானந்தன் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. உச்ச நீதிமன்ற நீதியரசர் எல்.நடராஜன் அவர்கள் விழா மலர் வெளியிட நீதியரசர் எஸ். ஜெகதீசன் அவர்கள் சி. நடராஜ முதலியார் திருவுருவப் படத்தை திறந்து வைத்து பேருரை ஆற்றினார்.
அவ் விழாவில் அன்னாரது குடும்பத்தினர் ரூபாய் இரண்டு லட்சம் நன்கொடை மற்றும் சுழற் கேடயம் செங்குந்தர் குல மேம்பாட்டு நிதிக்கு வழங்கப்பட்டது. 1983-ம் ஆண்டு நம் குல குரு வள்ளல் கிருபானந்தவாரியார் மற்றும் நம் குல கர்மவீரர் சி. நடராஜ முதலியார் இருவருக்கும் தென்னிந்திய மகாஜன சங்க புரவலராக கௌரவிக்கப்பட்டது. எளிமை, நேர்மை, நாநயம், பணிவு போன்ற குணங்கள் அவருக்கே உரிய சிறப்பு. ஐம்பது ஆண்டு கால சமுதாய பணியில் சிறப்புடன் செயலாற்றிய சி. என். அவர்கள் தம் 77-ஆம் வயதில் 18-04-1984 அன்று இயற்கை எய்தினார். தற்பொழுது செங்குந்த குல சொந்தங்களை சிறப்புடன் வழிநடத்திச் செல்லும் கைத்தறிக் கதிரவன் திரு. K.P.K.செல்வராஜ் தலைமையில் நம் குல இளைய செங்குந்த சமுதாயத்திற்கு நன்மனச்செம்மல் நடராஜ முதலியார் வாழ்க்கை வரலாறாகத் திகழும். - C.N.சிவக்குமார் செங்குந்தர், சென்னை.
Comments
Post a Comment